சென்னை: அயனாவரம் பகுதியில் கடந்த 20ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சங்கர் என்பவரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கிவிட்டுச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அஜித்குமார் மற்றும் கௌதம் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், முக்கிய நபரான ரவுடி சூர்யாவை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். திருவள்ளூரில் தலைமறைவாக இருந்த ரவுடி சூர்யாவை நேற்று (பிப்.21) கைது செய்த காவல் துறையினர், அவரை அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, நியூ ஆவடி சாலை வழியாக வரும்போது, சூர்யா சிறுநீர் கழிக்க வேண்டும் உடனடியாக வண்டியை நிறுத்துமாறும் இல்லையென்றால் வாகனத்திலேயே சிறுநீர் கழித்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து வாகனம் நிறுத்திய பிறகு திடீரென ரவுடி சூர்யா அங்கிருந்த கரும்பு ஜூஸ் கடையிலிருந்த கத்தியை எடுத்து காவலர்களான சரவணகுமார் மற்றும் அமானுதீன் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றார்.
அப்போது, பெண் உதவி ஆய்வாளர் மீனா பலமுறை கத்தியை போடுமாறு எச்சரித்தும் போடாததால் துப்பாக்கியால் சூர்யாவின் காலில் சுட்டு பிடித்தார். காயமடைந்த இரு காவலர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் காவலர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் நலம் விசாரித்துச் சென்றனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, “ரவுடி சூர்யா இரு காவலர்களைக் கத்தியால் தாக்கியுள்ளனர். அப்போது உதவி ஆய்வாளர் மீனா வானத்தை நோக்கி சுட்டு கத்தியை கீழே போடும் படி சூர்யாவிடம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இருந்தபோதும், கத்தியை கீழே போடாமல் வெட்டிவிட்டுத் தப்பிக்க முயன்ற சூர்யாவை உதவி ஆய்வாளர் மீனா துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். ஏற்கனவே ரவுடி சூர்யா மீது வழிப்பறி உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறார். மேலும், காயமடைந்த காவலர்கள் நல்லபடியாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருச்சி துப்பாக்கிச் சூடு: ''குற்றவாளிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை'' - காவல் ஆணையர் சத்ய பிரியா