சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் 100 நாட்கள் கொண்ட பிரபல ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது. அந்த ரியாலிட்டி ஷோவில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இறுதியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி ரசிகரிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
அந்த ரியாலிட்டி ஷோவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமனும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், இறுதிப் போட்டியாளர்களுக்கான பட்டியலில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வெற்றி பெற ஆன்லைன் மூலம் பொது மக்கள் வாக்களிக்கும் முறை உள்ளது. ஆன்லைன் வாக்கெடுப்பின் மூலம் போட்டியாளர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொடர்வதாக நம்பப்படுகிறது.
இதேபோல் கடந்த சீசன்களிலும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடப்பு சீசனில் போட்டியிடும் விசிக செய்தித் தொடர்பாளர் விக்ரமன், இறுதிக் கட்ட போட்டியாளர்கள் பட்டியலில் உள்ளார். பட்டியலில் உள்ள விசிக செய்தித் தொடர்பாளருக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தன் ட்விட்டர் பக்கத்தில் "தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் விக்ரமனுக்கு வாக்களிப்போம். அறம்வெல்லும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
ஒரு ரியாலிட்டி ஷோ போட்டியாளருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நடப்பு எம்.பி.யுமான திருமாவளவன் ஆதரவு அளித்து டிவிட்டர் பதிவு வெளியிட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமாவளவனின் வெளிப்படையான ட்விட்டர் பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த ரியாலிட்டி ஷோவின் முன்னாள் போட்டியாளரும், நடிகையுமான வனிதா ராஜ்குமார், விசிக தலைவர் திருமாவளவனுக்கு நேரடியாகப் பதிலளித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், "ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக மதிப்புக்குரிய ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவரும், சிட்டிங் எம்.பி.யுமான திருமாவளவன் எப்படி வாக்கு சேகரிக்கலாம்'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ரியாலிட்டி ஷோக்களில் அரசியல் தலையீடுகள் இருப்பது முறையல்ல என்றும், ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ள ஒருவருக்கு கட்சியின் தலைவரும், சிட்டிங் எம்.பி.யுமான திருமாவளவன் வாக்கு சேகரிப்பது என்பது பொழுதுபோக்கு தளத்தை தவறாக பயன்படுத்துவதாகும் எனவும் வனிதா விஜயகுமார் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Election Commission: நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!