சென்னை: சென்னை கிண்டியிலுள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, திரைப் பிரபலங்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். தொடர்ந்து நிகழ்ச்சியில், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, "சமூகத்தில் அசாத்திய பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தவர் கருணாநிதி. அவருக்கு திரையுலகம் மட்டுமின்றி அரசியலிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தவர். பெண்களுக்கான சொத்துரிமை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் போன்ற பல்வேறு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். அரசியல் ஒருபுறம் இருந்தால், சினிமாவை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. அதனால் தான் அவரை மரியாதையாக 'கலைஞர்' என கூறி வருகிறோம்.
1952ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் கை ரிக்ஷா இழுத்து வருபவரைப் பார்த்து சிவாஜி வருத்தப்பட்டுப் பேசுவார். அப்போது சிவாஜியிடம் "நீ வேண்டும் என்றால் ஆட்சிக்கு வந்து மாற்றிக் காட்டேன்" என்று சொல்லும் வசனம் இடம் பெற்றிருக்கும்.
பராசக்தி படம் வெளியாகி 17வருடங்களுக்குப் பிறகு ஆட்சி அமைத்து, கை ரிக்ஷாவை ஒழித்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவர் அரசியலைக் கடந்து அவர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. அப்படிப்பட்ட படைப்பாளிக்கு கலைத்துறையினர் இணைந்து இத்தகைய பிரம்மாண்டமாக நூறாவது விழா எழுப்பிக் கொண்டாடுவது மிக முக்கியமான விழாவாகப் பார்க்கிறேன். கருணாநிதிக்கும் அவரின் எழுதுகோல் மீதும் பெரும் மதிப்பு மற்றும் மரியாதை வைத்திருக்கிறேன். இந்தத் தருணத்தில் இருக்கும் போது, அவருடன் நான் இருந்திருக்கிறேன், பேசியிருக்கிறேன், ஆசீர்வாதம் பெற்றுள்ளேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. கலைஞர் அரசியலுக்காக அவர் அர்ப்பணித்த வருஷங்களுக்கு ஈடாகக் கலைக்கு அர்ப்பணித்த வருடங்களையும் முக்கியமானதாகப் பார்க்கிறேன்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: பிரம்மாண்டமான 'கலைஞர் 100' விழாவில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்..!