இலங்கை தலைநகர் கெழும்புவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பிராத்தனைக்காக அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது, இந்திய நேரப்படி சரியாக 8:45 மணிக்கு யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அங்கு சத்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதைத்தொடர்ந்து, கொழும்புவின் மிகப் பிரபல நட்சத்திர விடுதிகளான சின்னமன் கிராண்ட், சங்கரி லா, கிங்ஸ்புரி ஹோட்டல் ஆகிய இடங்களிலும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.
இதற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், 215 பேர் பலியாகியுள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக 10 பேரை இலங்கை அரசு கைது செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப் பெரும் தொடர் வெடிகுண்டு தாக்குதலாகக் கருதப்படும் இந்த நிகழ்வுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது கண்டனத்தையும், இரங்கலையும் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல்ஹாசன் இதுகுறித்து தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
நடிகர் ரஜினியின் ட்வீட்: ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் நடந்த இந்த (தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலால் ) துயரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ட்வீட்: மனிதர்கள் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கு வன்முறை தீர்வாகாது. அமைதிக்குப் பெயர்போன இலங்கையே, அமைதியைத் தொலைத்திருப்பது முரண்பாடான ஒன்றாக அமைந்துள்ளது.

இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்து இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து அந்நாட்டு அரசு நடுநிலையுடன் செயல்பட்டு, விரைவில் நீதியைப் பெற்றுத்தரவேண்டும்" எனத் கண்டனத்தையும், இரங்கலையும் பதிவிட்டுள்ளார்.
