சென்னை: விவசாயத்திற்காக பல்வேறு வகையில் மாபெரும் பங்களித்து வருபவர்களை கெளரவப்படுத்தி
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதனையாளர்களுக்கு உழவர் விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராஜ்கிரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளை கவுரவப் படுத்தினார்.
இதைப் பற்றியும், நடிகர் கார்த்தி பற்றியும் சமீபத்தில் அவரது முகநூலில் ராஜ்கிரண் கூறியுள்ளதாவது, "கலைஞர்களுக்கு சமூகப் பொறுப்பு மிக மிக அவசியம்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அந்த கட்டுரையில், ’கலைஞர்களுக்கு சமூகப்பொறுப்பு மிக மிக அவசியம். அதை உணர்ந்திருப்பதால் தான், அண்ணன் சிவகுமார் அவர்களின் புதல்வர்கள், தம்பி சூர்யா "அகரம் பவுண்டேஷன்" மூலமாக கல்வி உதவிகளை செய்து வருகிறார். தம்பி கார்த்தி அவர்கள், "உழவன் பவுண்டேஷன்" மூலமாக உழவர்களை ஊக்கப்படுத்துவதற்கான உதவிகளை செய்து வருகிறார்.
நம் இந்திய தேசம், விவசாய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. விவசாயம் செழித்தால் தான்,
நம் தேசம் செழிக்கும். நம்மாழ்வார் ஐயா அவர்களின் அயராத முயற்சியாலும், உழைப்பாலும்,
இன்று இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில், இயற்கை விவசாயத்தைப்பற்றிய நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. நம் மண்ணையும், மக்களையும் காக்க, இயற்கை விவசாயத்தை, லாபகரமாக நடத்தும் வழிகளை விவசாயப் பெருமக்களுக்கு மிகப்பரவலாக புரிய வைக்க வேண்டியது, நம் மண்ணின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
அந்த நல்ல நோக்கத்துக்காக, கார்த்தி ஒவ்வொரு வருடமும் "உழவர் விருதுகளை" விவசாயத் தொழிலில் சாதித்தவர்களுக்கு வழங்கி கவுரவித்து ஊக்கப்படுத்தி வருகிறார். இந்த வருடத்துக்கான விருதுகள் மற்றும்
அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் காசோலையானது,
1. மரபு விதைகளை மீட்டெடுத்து, அதை பரவலாக்கம் செய்வதற்காக பாடுபட்டு வரும் தம்பி, "உழுது உண் சுந்தர்" அவர்களுக்கும்,
2. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு, இயற்கை வேளாண் மற்றும் பண்ணை வடிவமைப்பு பயிற்சியை அளித்ததோடு, பல நீர் நிலைகளையும் மீட்டெடுத்த தம்பி, "வானகம் ரமேஷ்" அவர்களுக்கும்,
3. விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் தான், விவசாயிகள் நல்ல லாபம் பார்க்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக பாடுபட்டு வரும், போரூர் தம்பி தினேஷ் குமாருக்கும் வழங்கப்பட்டன.
அதோடு, அண்ணா பல்கலைக் கழகத்தில் Agriculture field உருவாக்குவதற்கு முதல் தொகையாக ரூ.1 லட்சமும்,
கோத்தகிரி மலைவாழ் பெண்கள் வெறும் கைகளால் தேயிலை பறிக்கும்போது ஏற்படும் இன்னல்களையும், பொருளாதார இழப்பையும் சரிசெய்வதற்காக, கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க கைகளில் மாட்டிக்கொள்ளும் கருவிகள் ரூ.1 1/2 லட்சம் செலவில் வாங்கிக் கொடுக்கப்பட்டன.
மருத்துவர், தம்பி கு.சிவராமன் அவர்களும், இயக்குநர், நடிகர், தம்பி பொன்வண்ணன் அவர்களும், திவ்யதர்ஷினி அவர்களும், பேராசிரியர் சுல்தான் முஹம்மது இஸ்மாயில் அவர்களும், சகோதரர் அனந்து அவர்களும், அண்ணன் நடிகர், ஓவியர் சிவகுமார் அவர்களும், தம்பி இயக்குநர் பாண்டிராஜ் அவர்களும், கார்த்திக் அவர்களுடன், நானும் விருதுகளை கொடுத்து கவுரவித்தோம்.
இத்தனைக்கும் காரணமான தம்பி கார்த்தி அவர்களுக்கு, என் மனம் கனிந்த நன்றிகளும், வாழ்த்துகளும். வாழ்க வாழ்க" இவ்வாறு எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற இந்திய இசையமைப்பாளர்!!