பாஜக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்பட்டன. விருப்ப மனுக்களை நடிகை கவுதமி நிர்வாகிகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர், நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்காக நடிகை கவுதமி சிறப்புப் பேட்டி அளித்தார்.
கேள்வி: பாஜகவில் மூத்தத் தலைவர்கள் இருக்கும்போது எதனடிப்படையில் உங்களை விருப்ப மனுக்கள் வழங்கச் செய்தனர்?
பதில்: பாஜக தொண்டர்களைச் சார்ந்த கட்சி. தொண்டர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி முக்கியத்துவம் அளிப்பது போல் வேறு எந்தக் கட்சியிலும் அளிப்பதில்லை. 23 வருடங்களாக கட்சிக்காக பல பொறுப்புகளில் வேலை செய்து, தற்போது விருப்ப மனுக்களை வாங்கவும் வழங்கவும் செய்திருக்கிறேன். இதைவிட வேறென்ன வேண்டும். இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
கேள்வி: தமிழ்நாட்டில் பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஏன் காலதாமதம்? எப்போது தலைவர் நியமிக்கப்படுவார்?
பதில்: அதைப்பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. எனவே, அதற்கான பதில் என்னால் கொடுக்க முடியாது.
கேள்வி: ரஜினி கூறுவது போல் தமிழ்நாட்டில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளதா?
பதில்: அரசியல் தலைமையில் வெற்றிடம் இருக்கிறது என்பது உண்மை. எதிர்காலத்தில் அது நிரப்பப்படும். அதுதான் இயற்கையின் நியதி. சரியான நேரத்தில் தகுதியான தலைவர் வரும்போது கண்டிப்பாக அது நடக்கும்.
கேள்வி: தமிழ்நாட்டில் திராவிட சக்திகளைக் கடந்து மாற்று சக்திகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: கண்டிப்பாக இருக்கிறது. பல ஆலோசனைகள், பல நம்பிக்கைகள், பல விதமான விஷயங்கள் வெளிவருவதை நாம் பார்த்துவருகிறோம். இதுவே அதற்கான மிகப்பெரிய ஒரு முன்னோட்டம். அதனால் பலமான வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி: பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது?
பதில்: இனிவரும் காலங்களில் அதைப் பார்க்கத்தான் போகிறோம்.
இதையும் படிங்க: பாஜக நிர்வாகிகளுக்கு விருப்ப மனு விநியோகித்த நடிகை கவுதமி!