சென்னை: சென்னை கிண்டியிலுள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, திரைப்பிரபலங்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். தொடர்ந்து நிகழ்ச்சியில், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ் முதலமைச்சர், நண்பர் உதயநிதி, சூப்பர் ஸ்டார், உலகநாயகனுக்கு மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் வணக்கம் கூறி அவரது உரையைத் தொடங்கினார். நடிகர் தனுஷ் பேசியதாவது, "கருணாநிதியின் அரசியல், சினிமா சாதனைகள் குறித்துப் பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. முதன் முதலில் தனிப்பட்ட முறையில் சினிமா படப்பூஜையில் தான் அவரை சந்தித்தேன். அப்போது என்னை "வாங்க மன்மத ராசா" எனக்கூறி அழைத்தார். அப்போது எனது பாட்டை அவர் பார்த்துள்ளார் என எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அவரை சந்தித்து ஒரு திரைப்பட பூஜைக்குப் பத்திரிக்கை அளிக்கும் போது, "கிராமத்திலிருந்து சிட்டிக்கு வருகிற பையன்” என்று கூறினார். எனக்கு அது அவ்வளவு பிரமிப்பாக இருந்தது. 75 படத்திற்கு மேல் பணியாற்றியவருக்கு இது சாதாரணம் எனத் தோன்றியது. என்னை எப்போது எங்குப் பார்த்தாலும் கண்ணத்தை வருடி எப்படி இருக்க என வசீகரமாகச் சிரிப்பார். திருமண நிகழ்வில் தனியாக இருந்த என்னை அழைத்து புகைப்படம் எடுத்தார். அதனைவிட அங்கீகாரம் என்ன எனக்கு இருந்து விடப்போகிறது.
நானும் அவரும் எந்திரன் படம் பார்க்கும் போது, அவருக்குப் பின் அமர்ந்து கொண்டு அவரையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். படத்தில் பேட் சிட்டி கதாபாத்திரம் வந்த போது ரஜினியைத்(தலைவரை) தட்டி சிரித்தார். அதனை அருகிலிருந்து பார்த்தேன்" என கருணாநிதியுடனான பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசுரன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு என்னைத் தொலைப்பேசியில் அழைத்து 'பிரதர் நான் ஸ்டாலின் பேசுகிறேன்' எனக் கூறினார். அவ்வாறு நம்மில் ஒருவராக முதலமைச்சர் உள்ளார். கருணாநிதியின் மறைவைப் பற்றிப் பேசினால்தான் அவர் மறைந்துவிட்டார் எனத் தோன்றுகிறது. அதுவரை அவர் நம்முடன் இருப்பதாகத்தான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அரசியல் கடந்து சினிமாவை கைவிடாததால் தான் அவரை கலைஞர் என அழைக்கிறோம்" - நடிகர் சூர்யா புகழாரம்!