சென்னை: தேசிய சுத்தமான காற்று திட்டம் (NCAP) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, 2024ஆம் ஆண்டுக்குள் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் காற்றிலுள்ள மாசு துகள்களை குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் 5 ஆண்டுக்கான திட்டம் ஆகும்.
இத்திட்டத்தை காற்று மாசு அதிகமாக உள்ள நாற்பத்தி இரண்டு நகரங்களில் செயல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று நகரங்களும் அடங்கியுள்ளன.
இந்தநிலையில், சென்னையில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக 181 கோடியை மத்திய நிதி ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 90.5 கோடி ரூபாயும், மற்றொரு 90.5 கோடி ரூபாயை இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஒதுக்கியது ஆணையம் .
சென்னை மாநகராட்சி முதலில் ஐ.ஐ.டி மெட்ராஸ் உடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மே மாதம் 5ஆம் தேதி கையெழுத்தானது.
ஐஐடி மெட்ராஸ் காற்றின் தரம், காற்று எங்கு அதிகமாக மாசு அடைகிறது, மாசு அடைவதற்கான காரணம், சுற்றுப்புற காற்றின் தர கண்காணிப்பு முதலியவற்றை ஆய்வு செய்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உதவியுடன் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்ப உள்ளது.
இந்தப் பணிக்காக மெட்ராஸ் ஐ.ஐ.டிக்கு ஓராண்டுக்கு 2 கோடியே 23 லட்சத்து 73 ஆயிரத்து 390 ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை பணி தொடங்குவதற்கு முன்பாக 50 சதவீதமும் பணி முடித்த பிறகு 50 சதவீதமும் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: பாரதியின் நினைவு நாள் செப்டம்பர் 12 - ஆதாரங்களை அடுக்கும் தமிழ்ப் பேராசிரியர்