சென்னை: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூமாலை (42). இவர் மீது கடந்த ஆண்டு அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பூமாலையை கைது செய்து விசாரணை நடத்தத் தேடி வந்த நிலையில், அவர் போலீசில் சிக்காமல் இருக்க வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பூமாலையை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று (ஜனவரி 11) இரவு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அதில், வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்த நிலையில் அதே விமானத்தில் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் தேடப்படும் தலை மறைவு குற்றவாளியான பூமாலையும் வந்துள்ளார். குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களைப் பரிசோதித்த போது இவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பூமாலையை வெளியில் விடாமல் குடியுரிமை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், குடியுரிமை அதிகாரிகள், அரியலூர் மாவட்ட போலீசாருக்கு தலைமறைவான குற்றவாளி பூமாலை சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ள தகவலைத் தெரியப்படுத்தி உள்ளனர். இதையடுத்து, அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பூமாலையை கைது செய்து அரியலூர் கொண்டு செல்வதற்காகச் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: முறை தவறிய உறவில் இருந்த ஒரு பெண்ணுக்கு போட்டி; நண்பனை கொலை செய்த நபர்.. நாகை சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி!