சென்னை திருநின்றவூர் தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்கி(17) என்பவர் நேற்று இரவு தனது நண்பரைச் சந்திக்க பெரியமேடு சட்டண்ணன் தெரு அருகே வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகத்தடை இருந்ததை கவனிக்காமல் வேகமாக சென்றதால் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
மேலும், முகப்போர் பகுதியைச் சேர்ந்த நிர்மல்(18) கல்லூரி முடித்துவிட்டு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் போரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது டேங்கர் லாரியின் பின்புறம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், காசிமேட்டைச் சேர்ந்த பாரதி (36) தனது மனைவியை அழைக்க இருசக்கர வாகனத்தில் புது வண்ணாரப்பேட்டை அருகே சென்றபோது நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதுமட்டுமின்றி, புழல் அருகே கார் மோதி பைக்கில் சென்ற டில்லிபாபு(32), ஆனந்த்(42) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், பாடி மேம்பாலம் அருகே வேன் மோதியதில் பைக்கில் சென்ற ரமேஷ்(30) உயிரிழந்துள்ளார். ஒரே நாளில் சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இவ்விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.