சென்னை: மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் கடந்த பத்து வருடமாக மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தால் நாள்தோறும் விபத்துகள் மற்றும் வழிப்பறி நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
சுங்க கட்டணமாக பல கோடி வசூல் செய்து வரும் நிலையில் சாலையின் இருபுறமும் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தராத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்தும் மின் விளக்கு வசதி அமைத்து தரக்கோரியும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் யுவராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கையில் தீ பந்தம் ஏந்தியும் டார்ச் லைட் அடித்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கூறியதாவது,”ஆண்டுக்கு 100 கோடி வசூல் செய்யக்கூடிய சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக தெரு விளக்கே இல்லை. மின் விளக்கு அமைத்து தர கூறி தகவல் அறியும் சட்டத்தில் கேட்டு ஒரு வருடம் ஆகியும் இதுவரை மின் விளக்கு அமைத்து தரவில்லை.
இதனால் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே உடனடியாக மின்விளக்கு அமைத்து தர வேண்டும்.” என கோரிக்கை வைத்தனர்.
மேலும் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மூன்று மாதத்திற்குள் 60 கிலோ மீட்டருக்குள்ளாக உள்ள சுங்க சாவடிகள் எடுக்கப்படும் என கூறி நான்கு மாதம் ஆகியும் சுங்கசாவடி எடுக்கப்படவில்லை" எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் என்ஐஏ தேடுதல் வேட்டை - சிக்கிய இரண்டு புள்ளிகள்!