சென்னையில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் இளம்பெண் அண்ணா நகர் காவல் நிலையத்தில் நேற்று (செப். 8) புகார் ஒன்றை அளித்தார்.
அதில், "நான் நேற்று மாலை அண்ணா நகர், ஐயப்பன் கோயில் அருகே என் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது காரில் அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் என் உடலழகைத் தவறாக வர்ணித்து தனியாகப் பேச அழைத்தார். அதனால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் காவல் துறையினர், சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சியை ஆய்வுசெய்தனர்.
அதில் காரில் வந்த நபர் பெண்ணை மடக்கி அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பதிவாகியிருந்தது. அந்தக் காரின் பதிவு எண்ணை வைத்து காவல் துறையினர் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவரது பெயர் கார்த்திக் (34) என்பதும், இவர் வெளிநாட்டில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவந்த நிலையில், கடந்த மாதம் இந்தியாவிற்குத் திரும்பியது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் கார்த்திக்கை கைதுசெய்த காவல் துறையினர் அவர் மீது விருப்பமின்றி பெண்ணை துன்புறுத்துதல் சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.