சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 4.87 கிலோ நகைகள், 24 லட்சம் பணம் ஆகியவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக, முன்னாள் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக விஜயபாஸ்கர், அவரது நண்பர், உறவினர்கள், பங்குதாரர்களின் வீடு, அறக்கட்டளை மற்றும் அலுவலகம் என மொத்தம் சென்னை, புதுக்கோட்டை எனப் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் இன்று(அக்.18) திடீர் சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி
இந்தச் சோதனையில் ரூ.23 லட்சத்து 85 ஆயிரத்து 700 ரூபாய் பணம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் வழக்கிற்குத் தொடர்புடைய பணம் 23 லட்சத்து 85 ஆயிரத்து 700 ரூபாய், 19 ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல இடங்களில் சோதனையானது, தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வீரப்பன்.. விஜய குமார்.. பட்டுக்கூடு.. நடந்தது என்ன?