சென்னை: ஆவின் நிறுவனத்தை அழித்துவிட்டு தனியார் பால் நிறுவனங்களை வளர்க்கும் நோக்கில் அரசின் செயல்பாடுகள் இருப்பதாகப் பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், "பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையைத் தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்க இருந்தாலும், அது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்று அமைந்துள்ளது. இதனால் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான தொகையைப் பட்டுவாடா செய்வதில் நீண்ட காலம் (50 நாட்கள் கடந்தும்) எடுத்துக் கொள்வதால், தமிழ்நாட்டில் அவினுக்கான பால் வரத்து கடந்த ஓராண்டுக் காலமாகக் கடுமையாகக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக "இணையத்தில் பால் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது" எனச் சென்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கொள்முதல் செய்யப்படும் பால் அனுப்பப்பட்டு வருவதால், 27 மாவட்ட ஒன்றியங்களில் பால் பாக்கெட்டுகள், பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை பல மாதங்களாகவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அவினுக்கான பால் வரத்துக் குறைவு காரணமாக வெண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் ஆவின் தயிர், மோர் மற்றும் பால் பொருட்களான பன்னீர், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் 'National Cooperative Dairy Federation of India' (NCDFI) மூலம் ஈரோடு, சேலம், மதுரை மற்றும் திருவள்ளூர் ஒன்றியங்களில் கையிருப்பில் உள்ள சுமார் 290 மெட்ரிக் டன் Mix Milk-ஐ பிப்ரவரி 13-இல் விற்பதற்கு E-Action கோரியுள்ளது கடும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
ஏனென்றால், ஏற்கனவே அவினுக்கான பால் வரத்துக் கடுமையாகக் குறைந்திருக்கும் சூழலில், விரைவில் கோடைக்காலமும் நெருங்கி வருகிறது. பொதுவாகவே கோடைக்காலத்தில் பால் உற்பத்தி பாதிப்பு இன்னும் அதிகமாகும். அதுமட்டுமின்றி ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வெண்ணெய் கொள்முதல் செய்து வரும் சூழலில், சொந்த உற்பத்தி மூலம் கையிருப்பிலிருந்த வெண்ணெய்யையும் கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோல் NCDFI மூலம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் தனக்கு மிஞ்சித் தான் தான தர்மம் செய்ய வேண்டும் என்பார்கள். தர்மம் செய்வதற்கே அப்படி எனும்போது, ஏற்கனவே பால் உற்பத்தி குறைந்து வருவதால், தனியார் பால் நிறுவனங்களோடு போட்டி போட வேண்டிய ஆவின் நிர்வாகம் எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்?
மேலும் பால் கொள்முதல் இறங்கு முகமாக இருப்பதால், அதனைச் சமாளிக்க பால் பவுடர் கூடுதலாகத் தேவைப்படுகிறது. NCDFI மூலம் விற்பனை செய்ய ஒப்பந்தம் கோருவது, ஒருவேளை அவினை அழித்து, தனியாரை வளர்க்கின்ற முடிவிற்கு வந்து விட்டார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது.
அது மட்டுமில்லாமல், ஆவின் நிர்வாகத்தில் இது போன்ற தவறான செயல்பாடுகளைத் தமிழ்நாடு அரசும், பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையும் கண்டு கொள்ளாமல் அமைதி காப்பதும் புரியாத புதிராகவே இருப்பதோடு, கூடுதல் சந்தேகங்களையும் எழுப்புகிறது” என்றார்.
இதையும் படிங்க: வேலூர் ஆவின் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.. தயிர் விநியோகம் பாதிப்பு!