சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் கிளைகளைத் தொடங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகக் கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கூறி மோசடி செய்ததாகக் கடந்த மே மாதம் 24ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 11 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா பெயரில் செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநரான பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு மாதத்துக்கும் மேலாகத் தலைமறைவாக உள்ள மீதமுள்ள இயக்குநர்களைக் கைது செய்யத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள இயக்குநர்கள் சிலர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
இந்நிலையில் ஆருத்ராவின் 100 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 70 வங்கி கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே 11 வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 70 வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கு விசாரணை அதிகாரியாகப் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விசாரணை தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.