இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் கட்டாயம் ஆதார் வழங்க வேண்டும். அவர்களுடைய விவரங்களை ஈஎம்ஐஎஸ்-வுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண் இருக்கும் மாணவர்களிடம் அவர்களின் பெற்றோரின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் எண் இல்லாத மாணவர்களை, பள்ளி வேலை நாட்களில், வட்டார வள மையத்துக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கான புதிய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேற்படி மாணவர்களிடம் இருந்து குறிப்பிட்ட கால வரையறுக்குள் ஆதார் எண்ணை பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் பதிவு செய்வதற்காகவோ அல்லது திருத்தம் செய்ய வந்தாலோ மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது.
ஆதார் எண் பதிவை மேற்கொள்ள வசதியாக மாவட்ட அளவில் ஆதார் பதிவுக் கண்காணிப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிவுறுத்தல் படி செயல்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் பதிவை செயல்படுத்த வேண்டும் என, அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.