சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச ஒருங்கிணைந்த விமான முனையத்தின் வெளியேறும் பகுதி ஆறாவது வாசல் அருகே குப்பைத்தொட்டி இருக்கும் இடத்தில் இன்று (செப்.1) காலை குவியல் குவியலாக கிடந்த ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகளை சில பயணிகள் எடுத்து பார்த்தனர்.
உடனே அங்கு பாதுகாப்பிற்காக நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அதை தடுத்தனர். இவைகளை விமான நிலைய ஊழியர்கள் தான் இங்கு கொட்டி இருக்கின்றனர் எனவும், அவர்கள் வந்து அள்ளி சென்று விடுவார்கள் என்றும் கூறி உள்ளனர்.
மேலும், முக்கியத்துவம் வாய்ந்த ஆதார், பான் கார்டுகள் மற்றும் பயணிகளின் பாஸ்போர்ட்கள் கேட்பாரற்று பொது இடங்களில் கிடந்தால் அதைக் கண்டெடுப்பவர்கள், அருகே உள்ள தபால் பெட்டிகளில் போட்டு விட வேண்டும். இல்லையேல் அருகே உள்ள அஞ்சல் நிலையங்களில் ஒப்படைத்து விட வேண்டும் என்பது அரசின் பொதுவான விதிமுறையாகும்.
அஞ்சல் துறையினர், அந்த கார்டுகளில் உள்ள முகவரிகளுக்கு, அஞ்சல் துறை தங்களது செலவில் அனுப்பி வைத்து விடும். இந்த நடைமுறை இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சர்வதேச விமான நிலையத்தில் குவியலாக ஆதார் மற்றும் பான் கார்டுகள் விமான நிலைய குப்பைத்தொட்டி அருகில் கொட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும், பயணிகள் கொண்டு வரும் ஆதார் கார்டுகளை, சிலர் தவறுதலாக விட்டு செல்கின்றனர். சில பயணிகளின் கைகளில் இருந்து தவறி கீழே விழுந்து விடுகின்றன.
இதைப்போல் கேட்பாரற்று விமான நிலையத்திற்குள் கிடக்கும், கார்டுகளை விமான நிலைய ஊழியர்கள் எடுத்து விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைப்பார்கள். அங்கு குறிப்பிட்ட காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் எனவும், கார்டுகளை தவறவிட்டவர்கள் வந்து பெற்று செல்வார்கள். ஆனால் நீண்ட காலமாக யாரும் வாங்க வராமல் இருக்கும் கார்டுகளை இதைப்போல் குப்பைகளோடு சேர்த்து விடுவோம் என்றார்.
இந்த கார்டுகளை முன்பு அஞ்சல் துறை மூலம், கார்டுகளில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தன. ஆனால் தற்போது கார்டுகளை தவறவிட்டவர்கள், இணையதளம் வாயிலாக புதிய ஆதார் கார்டுகளை டவுன்லோடு செய்து கொள்கின்றனர்.
எனவே, கார்டுகளை தவற விட்டவர்கள் மீண்டும் வந்து கார்டுகளை கேட்பதும் இல்லை எனவும், அதைப்போல் அஞ்சல் துறையும் முன்பு போல் இந்த கார்டுகளை திருப்பி அனுப்புவதில் ஆர்வம் காட்டுவது இல்லை என்றார். எனவே, தான் வேறு வழி இல்லாமல் இதைப்போல் குப்பையில் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது என தெரிவித்தார்.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: ஆதார், பான் கார்டுகளின் எண்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும், அவைகளைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள், தவறுகள், மோசடிகள் நடப்பதாகவும், இந்த நிலையில் பயணிகள் விட்டுச்சென்ற ஆதார், பான் கார்டுகளை, இதைப்போல் குப்பைத் தொட்டியில் போடுவது சரியானது அல்ல எனவும், அவைகளை முன்பு போல் அஞ்சல் துறை மூலம் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், இல்லையேல் விமான நிலையத்திலேயே தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.
இதையும்படிங்க:எம்பி கௌதம சிகாமணிக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!