தமிழ்நாட்டில் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய மின் இணைப்பை பெற்றிருக்கும் நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. தொடர்ந்து இதற்கான பணிகளுக்காக நவம்பர் 15 ஆம் தேதி முதல் 2 ஆயிரத்து 800 குழுக்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கு முன்பு, கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் வரையும், அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜன.31ஆம் தேதி வரையிலும், கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிக்கைகள் எழுந்த நிலையில் பின்னர் கடந்த பிப்.15ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கடந்த பிப்.15 ஆம் தேதி வரையில் 2.59 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் கடைசி நாளுக்குள் விரைந்து இணைக்க வேண்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரத்தில், கடந்த பிப்.15ஆம் தேதிக்குள் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும் இதற்கு மேலும் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் மின்சார வாரியம் அறிவித்திருந்தது. இருப்பினும் இந்த பணிகளுக்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தநிலையில், பிப்.28 ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, பிப்.28 ஆம் தேதியான இன்றே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. மின்வாரியம் அளித்த அவகாசம் இன்றே நிறைவடையும் சூழலில் மீதமுள்ள உரிமையாளர்கள், ஆதார் எண்ணை இன்றே இணைக்க வேண்டும் என்று மின் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தேசிய அளவிலான வாலிபால்: மதுரை அமெரிக்கன் கல்லூரி பெண்கள் அணி வெற்றி!