இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்துவந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூலை 25) வேதா இல்லத்தை அரசுடைமையாக்கும் நோக்கில் ரூ.67.90 கோடியை சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு, அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும் என்று 2017ஆம் ஆண்டில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
24,422 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லத்தைக் கையகப்படுத்தும் பணியும் தொடங்கியது. கடந்த மே 22ஆம் தேதி வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. இதற்காக உருவாக்கப்படும் அறக்கட்டளைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைவராகவும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உறுப்பினர்களாகவும் இருப்பர் எனவும் கூறப்பட்டது.
இதனிடையே ஜெயலலிதா சொத்தை நிர்வகிப்பதற்காக ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், வருமான வரித்துறை சார்பில், ஜெயலலிதா பேரில் ரூ. 36 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது. அதனால், வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் சார்பில், தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணையின் போது ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை தாங்கள் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். இவ்வழக்கில், கடந்த மே 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் தீபா, தீபக் ஆகிய இருவரையும், இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தது. பின்னர் மே 29ஆம் தேதி இந்த அறிவிப்பில் திருத்தம் செய்து இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று தெரிவித்தது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணைகளைக் கைவிட்டு, வீட்டு சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் வாரிசான தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 16ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டைக் கையகப்படுத்துவதற்காக அதன் இழப்பீடு தொகையான ரூ. 67.90 கோடியை சிவில் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு டெபாசிட் செய்துள்ளது.
உரியவர்கள் இந்த இழப்பீட்டுத் தொகையை சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த தொகையைச் செலுத்தியதன் மூலம் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான மக்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் மார்ச் மாதம் முதற்கொண்டு தொடர்ந்து ஊரடங்கு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். இன்னும் கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை, முறையான போக்குவரத்துகள் ஆரம்பிக்கவில்லை இது பற்றி எல்லாம் கவலைப் பட்டு துரிதமாக மக்கள் பிரச்னையை தீர்க்க வேண்டிய மாநில அரசு.
மறைந்த ஜெயலலிதாவுக்கு உடனடியாக நினைவிடம் கட்ட வேண்டும் என்பதில் மட்டும் ஏன் தீவிரம் காட்ட வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இது தேவையற்றது. ரூ. 38 கோடி வருமானவரி செலுத்தாதது ஜெயலலிதாவின் குற்றம் இதற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்பது எந்த விதத்தில் நியாயம்? மொத்தம் ரூ. 67.90 கோடி மக்கள் பணத்தை விரையம் செய்ய யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது. இந்த இழப்பீட்டு தொகை ரூ. 67.90 கோடியை அதிமுக கொடுக்க வேண்டியது தானே" என்றார்.