சென்னை: திருமுல்லைவாயில் ஏரிக்கரை, திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் (22). பெயிண்டரான இவர் நேற்று மதியம் 12 மணியளவில் ஆவடியில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் பயணிகள் ரயிலில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக வெற்றிவேல் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
ரயில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மகேந்திரன் படியில் தொங்கியபடி பயணம் செய்ததாக வெற்றிவேலை பிடித்து வில்லிவாக்கம் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வெற்றிவேலை அசிங்கமாக பேசி காவல் நிலையத்திற்கு பெயிண்ட் அடிக்குமாறு கூறியுள்ளார்.
பெயிண்ட் அடித்து முடித்த பின்னர் வெற்றிவேல் வீட்டிற்கு கிளம்புவாக கூறிய போது, காவலர்கள் அங்குள்ள கழிவறையை சுத்தம் செய்து விட்டு செல்லுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெற்றிவேல் கழிவறையில் இருந்த லைசாலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து காவலர்களிடம் தெரிவித்த போதும் பொருட்படுத்தாமல் வெற்றிவேலை பணி செய்ய வைத்துள்ளனர்.
பின்னர் அந்த வேலையை முடித்தவுடன் சுமார் 2.30 மணிக்கு அவரை விடுவித்துள்ளனர். அங்கிருந்து வீட்டிற்கு சென்ற வெற்றிவேல் மயக்க மடைந்ததால் உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக வெற்றிவேல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட வெற்றிவேலின் குடும்பத்தினர் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.