சென்னை: திருப்பத்தூரை சேர்ந்த சுவீத் என்பவர் சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல உள்ளார். இவரை வழி அனுப்புவதற்காக அவரது நண்பர்களான ஆசை தம்பி, கவுதம் உட்பட 4 பேர் ஏப்ரல் 24(திங்கட்கிழமை) மாலை திருப்பத்தூரிலிருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் செல்வதற்காக இரவு 7 மணியளவில் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் சென்றுள்ளனர். ரயிலானது மாம்பலம் மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையம் இடையே சென்றுக் கொண்டிருந்த போது ஆசைத்தம்பி திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றவுடன், ஆசைதம்பியை காப்பாற்ற ரயில் தண்டவாளத்தில் இறங்கி ஓடிய போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில் கௌதம் என்பவர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: வழிப்பறியில் இறங்கிய பாடி பில்டர் - கர்நாடகாவில் பிடிபட்டது எப்படி?!
இதில், ரயிலில் இருந்து தவறி விழுந்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய ஆசைதம்பியை மீட்ட பொதுமக்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சார ரயில் மோதி உயிரிழந்த இளைஞர் கவுதம் உடலை மீட்ட ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற சென்ற போது இளைஞர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Madras IIT: சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை: விசாரணை குழு அமைப்பு!