இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடக்கவுள்ள நிலையில், சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு சார்பாக சீன- இந்திய சந்திப்பு என்கிற தலைப்பில் இணைய நட்சத்திரங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், இருநாட்டு தூதரக பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட சீன வானொலியின் தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பூங்கோதை, நிலானி, கலைமகள் உள்ளிட்டோர் தமிழில் பேசி அசத்தினர். மேலும், சீனாவில் தமிழ் மொழிக்கு உள்ள வரவேற்பு, இருநாட்டு உறவின் முக்கியம்சங்கள், நாட்டின் சிறப்பம்சங்களான கலை, கலாசாரம், உணவு பழக்கவழக்கம் ஆகியவற்றை மேடையில் பேசி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கீழடி அகழாய்வு அறிக்கை புத்தகத்தை சீன தூதரக பிரதிநிதிகளுக்கும், தமிழ் அகராதியை சீன வானொலி தமிழ் தொகுப்பாளர்களுக்கும் அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்க்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெரும் முயற்சி எடுத்தார். தமிழ் வளர் மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம். உதவி கிடைக்கும் பட்சத்தில் சீனாவில் நான்கு இடங்களில் தமிழ் வளர் மையங்களை அமைப்போம்.
கீழடியில் உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகம் விரைவில் அமையவுள்ளது. அதற்கான இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளதால் கீழடியில் உள்ள பொருட்களை திருமலை நாயக்கர் மஹாலுக்கு மாற்றவுள்ளோம்.
கீழடி அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. விரைவில் மத்திய அரசின் உதவியோடு கீழடியில் உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகம் அமைக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வாரா ராகுல் காந்தி?