சென்னை: சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்குச் சென்று உள்ளார். அவருக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வயிற்றில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள கதிரியக்கவியல் மையத்திற்கு அந்த இளம் பெண் ஸ்கேன் எடுப்பதற்குச் சென்றதாகவும், அங்கு முதுகலை மருத்துவர் கோகுல கிருஷ்ணன் அந்த பெண் நோயாளியிடம் ஸ்கேன் எடுப்பதற்காக ஆடையைக் கழட்டச் சொல்லியதாகவும், அதனைத் தொடர்ந்து பாலியல் ரீதியாக வன்முறை செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மருத்துவக் குழு விசாரணை செய்து, கதிரியக்கவியல் மருத்துவர் கோகுல கிருஷ்ணனை 2 வாரம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இது குறித்து வெளியில் புகார் தெரிவிக்க வேண்டாம் எனப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விரக்தியடைந்த அந்த பெண் நோயாளி, இந்த சம்பவம் குறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் சென்னை தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்ததாகவும், அந்த புகாரின் அடிப்படையில் பெண்ணிடம் தவறாக நடந்த கொண்ட மருத்துவர் கோகுல கிருஷ்ணன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை பேருந்து நிலையத்தில் வெள்ளநீரில் மிதந்து வந்த ஆண் சடலம்!