சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதேபோன்று, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துகளை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, மற்றும் கருணாநிதி ஆகியோர் நினைவு மண்டபங்களில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், பெரியார் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் சென்னை சிஐடி காலனியில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டில் உள்ள அவரது புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, பெரிய கருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கேக் வெட்டி கொண்டாடிய ஸ்டாலின்: பிறந்த நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். மேலும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வேல்முருகன், வைகோ, கே.எஸ். அழகிரி, தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
மஞ்ச பையில் மரக்கன்று: பசுமையை வளர்க்கும் நோக்கில் மஞ்சப்பையில் மரக்கன்றுகளை தொண்டர்களுக்கு ஸ்டாலின் வழங்கினார். மேலும், ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் ஷா என்பவர் ஸ்டாலினுக்கு ஒட்டகத்தைப் பரிசாக அளிக்க, ஒட்டகத்துடன் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து, ஒட்டகத்தைப் பரிசளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகள் சார்பில் எதிர்ப்பு இருந்தபோதிலும், அதனை செயல்படுத்த திமுக அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இந்நிலையில், ஸ்டாலினுக்கு பேனா சின்னத்தை பரிசாக திமுக தொண்டர் ஒருவர் வழங்கினார்.
பொதுவாக தலைவர்கள் பிறந்தநாள் என்றால் தொண்டர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்நிலையில் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். காவல்துறையினர் திமுக தொண்டர்களை உள்ளே விட அனுமதி மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி நிறுவனத்தைச் சார்ந்த நபர்களையும் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்காமல் இருந்தது சற்று சுணக்கத்தை ஏற்படுத்தியது.
வீதியில் வீசப்பட்ட மரக்கன்றுகள்: பசுமையை வளர்க்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு மரக்கன்றுகளை மஞ்சப்பையில் வழங்கினார். ஆனால், தொண்டர்களோ மரக்கன்றுகளை சற்றும் மதிக்காமல் வீதியில் வீசி விட்டுச் சென்றனர். மேலும் குப்பையோடு குப்பையாக வீதியில் மரக்கன்றுகள் கிடந்தன. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
சாலையில் இருந்த அமைச்சர்களின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: முதலமைச்சர் ஸ்டாலினை காண வந்த அமைச்சர்கள் மற்றும் பிரபலங்களின் கார்கள் அண்ணா அறிவாலயத்தின் வெளியே சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட காரணத்தால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் இருந்தது. அவ்வப்போது காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முயன்ற போதும், நெரிசலைத் தவிர்க்க முடியாத சூழ்நிலை நிலவியது.
வாழ்த்து தெரிவித்த நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்: ' 'மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்' என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தேன். என் அன்புக் கட்டளையை ஏற்றுப் புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்த உடன்பிறப்புகளுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன்.
அவற்றை நட்டு, பராமரித்து வளர்ப்பீர் நாளை நலமாக மேலும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி’’ எனத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பிரம்மாண்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மகளிருக்கு சிறப்பு கட்டண சலுகை