சென்னை: திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் கருணாஸ் என்ற பேக்கரி கடை நடத்தி வருபவர்கள் கணேஷ் மற்றும் கருணாஸ். இந்த கடையின் மேலாளர் ஜமாருதீன்(48) கடையிலிருந்த போது கடந்த 7 ஆம் தேதி இரவு 9 மணியளவில் இவரது பேக்கரிக்கு வந்த திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் மூவர் மிக்சர் பாக்கெட்டுகள் மற்றும் சில பொருட்களைப் பறித்துச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வைரலானது.
குறிப்பாகப் பணம் தராமல் சிப்ஸ் பாக்கெட்டுகளை பறித்துச் செல்வதாகத் சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த காட்சியை பகிர்ந்து வந்தனர்.இந்த வீடியோ தொடர்பாக காவல்துறை அளித்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையோடு உள்ள பார் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலையில், குடிமகன்கள் சிலர் அந்த மதுபான கடையில் மது வாங்கிவிட்டு சாலையில் குடிமகன்கள் அராஜகத்தில் ஈடுபடுவதாகத் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் வந்ததாகவும், அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று குடிமகன்களை அலைத்தபோது, அதில் ஒருவர் எதிரே இருந்த கருணாஸ் பேக்கரியில் தரமற்ற உணவு பொருட்களை விற்பதாகப் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் போலீசார் கருணாஸ் பேக்கரியில் சோதனை செய்து அங்கிருந்த தரமற்ற தின்பண்டங்களை எடுத்துச் சென்று கடையின் மேலாளர் ஜமாரூதின் மீது வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைத் திருப்பி கொடுத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாகப் பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததால், கருணாஸ் பேக்கரி கடையில் தரமற்ற பொருட்களை விற்பதாக உணவு பாதுகாப்புத் துறைக்குக் கடந்த 9 ஆம் தேதி திருவல்லிக்கேணி போலீசார் புகார் அளித்துள்ளதாகத் கூறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பேக்கரி கடையில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி 10 கிலோ தரமற்ற உணவு பொருட்களை கைப்பற்றி, லைசன்ஸ் இல்லாததால் நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே தரமற்ற பொருட்களை விற்பதாக போலீசார் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததால் ஆத்திரத்தில் போலீசார் மீது வணிகர் வீண் பழி சுமத்துவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கும் வணிகர்கள், சென்னையில் மதுபான கடையுடன் கூடிய பார்களுக்கு லைசன்ஸ் வழங்காத நிலையில் சட்டவிரோதமாக மதுபான பார்கள் நடைபெறுவதாகவும், மதுபான கடைக்கு அருகே 100 மீட்டர் தூரத்திற்கு வாட்டர், கிளாஸ், தின்பண்டங்கள் விற்பனை செய்ய போலீசார் அனுமதிப்பதில்லை என்றும், அதே போன்ற ஒரு சம்பவம் தான் வாலாஜா சாலையில் உள்ள கருணாஸ் பேக்கரியிலும் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த கடையில் இருந்த டிவி ஆரையும் போலீசார் கைப்பற்றி சென்று விட்ட நிலையில் 9 ஆம் தேதி இரவு உணவு பாதுகாப்புத் துறைக்கு , காவல்துறை மூலமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் பல கடைகளில் மொத்தமாகத் தின்பண்டங்களை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், ஏன் பார்களில் கூட இதே போன்ற பாக்கெட்டுகளே விற்பனை செய்யப்படும் நிலையில் சிறு சிறு பாக்கெட்களில் லேபிள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டி பறிமுதல் செய்வது நியாயமா எனவும் வணிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதையும் படிங்க:உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 34 பேரில் 30 பேர் உயர் சாதியினர் - திருமாவளவன்