சென்னை: செம்படம்பர் ஐந்தாம் தேதி அன்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த ஆசிரியர்கள் பற்றி வெளியான சில படங்களை பார்க்கலாம். எத்தனையோ தமிழ் சினிமாக்கள் ஆசிரியர் பணியை குறித்து வந்திருந்தாலும், ரசிகர்கள் பட்டாளம் பெற்ற நடிகர்கள் ஆசிரியராக நடித்தால் அது எப்போதும் ஸ்பெஷல் தான். அப்படி ரசிகர்களுக்கு பிடித்தமான ஆசிரியர்களில் முதன்மையானவராக திகலக்கூடியவர் 'நம்மவர்' கமல்.
1994ம் ஆண்டு கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான இப்படம், இப்போது வரையிலும் சிறந்த படமாக கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியர் புத்தக பாடத்தை மட்டும் மாணவர்களுக்கு கற்றுத் தராமல், புத்தகத்தை தாண்டிய பாடத்தை கற்பித்தக் குறித்து இப்படம் பேசியது. பாலின பாகுபாடுகள் பற்றியும், கல்லூரியில் நிலவும் ரவுடியிசம் செய்யும் மாணவர்கள் மனநிலை அறிந்து அவர்களை கையால்வது என, 'நம்மவர்' படத்திக் நடிகர் கமல் அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் பாடம் கற்பித்த சாட்டை தயா சார்: சமுத்திரக்கனி நடிப்பில், பிரபு சாலமோன் தயாரிப்பில் வெளியான படம் 'சாட்டை'. இயக்குநர் அன்பழகன் இயக்கத்தில் உருவான இப்படமும் மாணவர்களின் வாழ்க்கையை பற்றி பேசியது. பள்ளியில் மாணவர்களுக்குள் இருக்கும் மதிப்பெண் போட்டி, ஒழுக்கம், பாலின பாகுபாடு பற்றி இப்படம் கொஞ்சம் அழுத்தமாகவே பேசியது.
தயாளன் என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை கண்முன் நிறுத்தி இருப்பார். ஆசிரியர்களுக்குள் இருக்கும் அசட்டுத்தனம், மாணவர்கள் மீது அக்கறை இன்றி வேலை செய்யும் ஆசிரியர்கள் என இப்படத்தில் காட்டப்பட்டிருந்தது. மதிப்பெண் கடந்து மாணவர்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற கருத்தையும் இப்படம் ஆழமாக பேசியது.
விருது வாகை சூடிய சிறப்பான படைப்பு: இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், விமல் நடிப்பில் வெளியான மிக சிறந்த படம் 'வாகை சூட வா'. கல்வி ஒரு மனிதனுக்கு எத்தனை முக்கியம் என்பதை அழகான திரைக்கதையுடன் சொல்லியிருந்தார் இயக்குனர் சற்குணம். செங்கல் சூளையில் வெந்து கிடக்கும் மக்கள் எப்படி முதலாளித்துவத்தால் சுரண்டப்படுகிறார்கள், கல்வி எப்படி அடிமை விலங்கை உடைத்தெறியும் ஆயுதமாக மாறுகிறது என்பதை அழகாக காட்டிய படம்.
"எம்புள்ளைக்கு எதையாச்சும் சொல்லிக் குடுயா" என்று படத்தில் ஆசிரியராக நடித்திருந்த விமலிடம் ஒரு தாய் வந்து கேட்கும் இடம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் காட்சியாக அமைந்தது. இப்படத்தின் சிறந்த காட்சிகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பட்டியலிட்டு கொண்டே போகலாம்.
குறிப்பாக படத்தின் இருதியில், செங்கல் சூலையை சார்ந்தவர்கள் அவர்களை ஏமாற்ற முயன்று, தவராக கணக்கு சொல்லும் போது அப்பகுதி சிறுவர்களே சரியாக கணக்கிடுவது என படத்தின் திரைக்கதை மிக அழகாக அமைந்திருந்தது. குறிப்பாக இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை படத்தின் ஒவ்வோரு காட்சிகளையும் மெருகூட்டியது. இப்படம் அந்த ஆண்டு சிறந்த தமிழ் படத்திற்கான் தேசிய விருதை பெற்றது.
மனமாற்றத்திற்கு வழி வகுத்த தங்க மீன்கள்: இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளிவந்த படம் தங்க மீன்கள். தந்தை மகள் பாசத்தை மையமாக கொண்டு உருவான இப்படம், மாணவர்கள் சிறந்து நிலையில் முன்னேற்றம் அடைய ஆசிரியர்களின் ஊக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் பேசியது.
குழந்தைகளின் வாழ்க்கை சிறக்க படிக்கும் பள்ளியை விட, பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தான் முக்கியம் என்பதை தங்க மீன்கள், அனைவருக்கும் பாடம் புகட்டியது. இப்படம் வெளியான சமயத்தில் பலர் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் மன மாற்றத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது.
தைரியமளித்த ராட்சசி: கௌதம்ராஜ் இயக்கத்தில், ஜோதிகா நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'. கிட்டத்தட்ட சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தின் கதை சாயலை கொண்டிருக்கும். பின்தங்கிய நிலையில் இருக்கும் பள்ளியை எப்படி நம்பர் ஒன் பள்ளியாக மாற்றுகிறார் என்பது தான் இப்படத்தின் கதை. படத்தில் ஜோதிகா தலைமை ஆசிரியராக நன்றாக நடித்திருப்பார்.
பள்ளியை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்லும் போது ஏற்படும் பிரச்சனைகளை எப்படி தீர்க்கிறார் என்பது தான் படத்தின் கதைக்களமாக அமைந்திருக்கும். சிறந்த ஆசிரியர் என்பதை தாண்டி, கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம், பிரச்னைகளை எதிர் கொள்ள எந்த அளவுக்கு தைரியம் தருகிறது என்பதை இப்படம் சிறப்பாக கற்பித்து இருக்கும்.
மறக்க முடியுமா வாத்தி ரைடை: நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்பதால், 'மாஸ்டர்' படத்தை, கமல் நடித்த 'நம்மவர்' படத்தின் தாக்கத்தில் இருந்து உருவாக்கி இருப்பார்.
குறிப்பாக மாணவர்களுக்கு மாணவர்களுக்கு இருக்க வேண்டிய அரசியல் தெளிவு, தவிர்க்க வேண்டிய போதை பொருட்கள் ஆகியவை குறித்து அதிரடியாக நடித்திருப்பார் நடிகர் விஜய். போதையில் தள்ளாடும் ஆசிரியர் மனம் திருந்தி, போதை வலையில் சிக்கிக்கொண்ட மாணவர்களை காப்பாற்றும் சம்பவம் அனைவரையும் ரசிக்க செய்தது.
படிக்கும் முறை குறித்த விளக்கம் தந்த நகைச்சுவை படம்: ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் நண்பன். இந்தியில் வெளியான 'த்ரீ இடியட்ஸ்' (3 idiots) படத்தின் ரீமேக் படமாக இப்படம் உருவானது. இதில் வைரஸ் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சத்யராஜ். மாணவர்கள் எப்போதுமே படிப்பிலும், ஒழுக்கத்திலும் நம்பர்-ஒன் ஆக இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்.
மறுபுறம் அவரது மாணவனாக நடித்த விஜய், மாணவர்களுக்கு பிடிக்கும் வகையில் அறிவியலை கற்பிக்கும் ஆசிரியராகவும் வளர்ந்திருப்பார். குறிப்பாக தேர்ந்தெடுக்கும் கல்வியோ, அதன் மூலம் அடயும் வெற்றியோ மனம் விரும்புவதை செய்தால் அதில் சாதனை என்பது நிச்சயம் என்பதை இப்படம் பேசியிருக்கும்.
தெலுங்கு திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி'. தனியார் பள்ளிக்கும் அரசுப் பள்ளிக்கும் இடையே நடக்கும் போட்டி குறித்து தான் இப்படம் பேசி இருக்கும். தனுஷ் இதில் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக போராடும் ஆசிரியராக நடித்திருப்பார். மாணவர்களுக்கு இடையே இருக்கும் சாதிய வேறுபாடு, படிப்பின் முக்கியத்துவம், எத்தனை சூழ்நிலையிலும் படிப்பை கைவிடாமல் இருப்பது என இப்படம் பல பாடங்களை புகட்டியது.
பேராண்மை சொல்லும் சமத்துவமும், தேசப்பற்றும்: மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த அற்புதமாக படைப்பு 'பேராண்மை'. பழங்குடி இனத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரியான ஜெயம் ரவி எப்படி சாதிய அடக்குமுறையாலும், முதலாளித்துவத்தாலும் புறக்கணிக்கப்படும் ஜெயம் ரவி, மாணவர்களுக்கு கற்பிக்கும் சிந்தனைகள், தர்காப்பு திறன்கள் படத்தின் சிறப்பு.
எத்தனை இன்னல்கள் வந்தாலும் கல்வியும் திறமையும் நம்மை காக்கும் என்ற கருத்தையும், நாட்டின் மீதான பற்று எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அழுத்தமாக படமாக்கி இருந்தார் எஸ்.பி.ஜனநாதன். இந்த படங்கள தவிர இன்னும் நிறைய படங்கள் ஆசிரியர்கள் பணியை பற்றியும், கல்வியின் முக்கியத்துவன் குறித்து பேசும் பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன.
அவற்றை பார்க்கும் போது நமக்கு நல்ல பாடமாகவும், ஒரு வேளை மற்றவர்களுக்கு கற்பிக்கும் நிலைக்கு வரும் போது நல்ல ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும், இலையெனில் நம்முடைய வாழ்வில் நம்மை செதுக்கிய ஆசிரியர்களை நிணைவு கூறும் வகையில் அமைந்திருக்கும்.