சென்னை: சென்னையில் தினமும், நாளொன்றுக்கு உற்பத்தியாகும் கழிவுகளின் அளவு அதிகரித்து வருகிறது. இதில், முக்கியமாகப் பார்க்கப்படுவது திடக்கழிவு தான். சென்னையில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளின் அளவு 6,143 டன் ஆக இருந்து வருகிறது.
வரும் காலங்களில் அது, 11,973 டன்களாக அதிகரிக்கும் என சென்னை மாநகராட்சி சார்பில் கணிக்கப்பட்டுள்ளது. அதேப்போல், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பல ஆண்டுகளாகக் கொட்டப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கில், ‘பயோ மைனிங்’ முறையில் குப்பைகள் அகற்றப்பட்டு நிலம் மீட்கும் பணிகளையும் மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது.
மேலும், சென்னை மாநகராட்சி மேயர் இத்தாலி நாட்டிற்குச் சென்று, அந்த நாட்டின் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்த பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சில முக்கிய பரிந்துரைகளை அளித்துள்ளார். அதில் கொடுங்கையூரில் கொட்டப்படும் குப்பையிலிருந்து 15 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு ஏற்றவாறு திட்டம் இருப்பதாகவும், இந்த திட்டமானது சென்னை மாநகராட்சிக்கு புதியது என்றாலும், ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த நடைமுறையின் விளைவுகள் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களின் உடல்நலனுக்கும் ஆபத்து என்பது தான் உண்மை.
மேலும், சென்னை மாநகராட்சி திடக்கழிவைச் சார்ந்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில் குப்பைகளின் மூலம் சிஎன்ஜி வாயு, மின்சாரம் எடுத்தல், மற்றும் எரி உலைகள் மூலம் குப்பைகளை எரிப்பதன் மூலம் வரும் சாம்பலிலிருந்து கற்கள் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களையும், சென்னை மாநகராட்சி உற்பத்தி செய்ய முடியும் என மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
குப்பைகளை எரி உலைகள் மூலம் எரித்தல் என்பது சூற்றுச்சுழல் மற்றும் உடல்நலத்திற்கும் தீங்கனாது ஆகும். பிளாஸ்டிக் உள்ளிட்ட ஆபத்தான குப்பைகளை எரிப்பதற்காக ரூ.2,045 கோடி செலவில் குப்பை எரி உலைகள் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து சென்னை மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த திட்டத்தால் காற்று மாசுபடும், உடல் நலக்கேடுகள் ஏற்படும். இந்தத் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
திடக்கழிவு மேலாண்மை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் டாமின் கூறியதாவது,"குப்பைகளை அவைகள் தோன்றும் இடத்திலே கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையாக மறு சுழற்சிக்கோ, மறு பயன்பாட்டுக்கோ உட்படுத்த முடியாத அல்லது பாதுகாப்பான கழிவு நீக்கத்துக்கு உட்படுத்த முடியாத நேரத்தில் பாதுகாப்பான மாற்றுகள் உள்ள பொருட்களின் உற்பத்தியையும், பயன்பாட்டையும், குறைக்கவோ அல்லது தடையோ செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
இதேபோல், குப்பைக்கான வரி, கட்டணம் போன்றவற்றைக் குப்பைகளின் அளவின் அடிப்படையிலோ அல்லது பொருளாதார அடிப்படையிலோ இரண்டையும் கருத்தில் கொண்டோ நிர்ணயிக்க வேண்டும். ஏனெனில் குப்பையின் அளவில் அதை உருவாக்குபவரின் பொருளாதாரப் படிநிலை முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும், குப்பைகளை எரி உலைகள் மூலம் எரிப்பது, சுற்றுச்சுழல் மற்றும் மக்களின் சுகாதாரம் சார்ந்தவை ஆகும். அதற்கு மாற்று வழிகள் செய்யப்பட வேண்டும். கழிவுகள் தரம் பிரித்துப் பெறப்படுவதை உறுதி செய்து மறுசுழற்சி செய்யத்தக்கப் பொருட்களை 100 விழுக்காடு மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும்.
குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்யத்தக்கக் கழிவுகளைப் பிரித்தெடுத்த பின் உருவாகும் கழிவுகள் நீர்நிலைகள் போன்ற இடங்களில் கொட்டப்படுவதைத் தவிர்த்து, முறையாகச் சேகரிக்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஏற்கனவே, காலாவதியான குப்பை கொட்டும் இடங்களை (Dumping yards) அடையாளம் கண்டு அவற்றை Bio Capping அல்லது Bio mining போன்ற தொழில் நுட்பங்களின் மூலம் மீட்டெடுப்பதோடு புதியதாக உருவாகும் குப்பைகளைப் புதைக்க அறிவியல்பூர்வமான, சூழலுக்குப் பாதுகாப்பான நிலத்தடி குப்பைக்குக்களை (landfills) உருவாக்க வேண்டும்.
மேலும், நிலத்தடிக் குப்பைக் குழிகளில் மட்காத, மறு பயன்பாடோ அல்லது மறுசுழற்சியோ செய்ய இயலாத, வேதிவினைத் திறனற்ற பொருட்கள் மட்டுமே கொட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மின் கழிவுகள் போன்ற அபாயகரமான கழிவுகள் மற்ற திடக்கழிவுகளுடன் சேராமல் இருப்பதை உறுதி செய்து அவற்றை உருவாக்கிய நிறுவனங்களே திரும்பப் பெறச் செய்யவேண்டும்.
இவற்றை மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது தேவைக்கேற்ப வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகச் சேகரிக்க ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய செயலிகளைப் பயன்படுத்தலாம். இவற்றை உள்ளாட்சி அமைப்புகளே செயல்படுத்தினால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிவதோடு இக் கழிவுகளின் மூலப்பொருட்களிலிருந்து வருவாயும் ஈட்ட முடியும்” என்றார்.
இதையும் படிங்க:MP Kanimozhi: 'மக்கள் களம்' எம்.பி கனிமொழி எடுத்த உடனடி ஆக்ஷன்.. தூத்துக்குடி சிறுமிக்கு கிடைத்த மறுவாழ்வு!