சென்னை: மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத ஜனநாயக நடவடிக்கைகளைக் கண்டித்து தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமையில், ஒன்றிய அரசுக்கு எதிராக திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி முருகன், காஜா மொய்தீன், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலன், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு,பகுதிசெயலாளர் மா.பா.அன்புத்துரை மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆ. ராசா, இன்றைய ஒன்றிய அரசுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. உடனடியாக ஒன்றிய அரசு மக்கள் ஜனநாயக விரோதப் போக்கை கைவிட வேண்டும். இல்லையெனில் திமுக தலைவர் மற்றும் முக்கிய இந்திய அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி ஒன்றிய அரசை அப்புறப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தீர்ந்தது பெற்றோரின் வேதனை; அரசுப் பள்ளி மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார் ஸ்டாலின்'