சென்னை: மத்தியில் ஆளும் பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக வேலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன்10) இரவு சென்னை (Amit Shah visits Tamil Nadu) வருகிறார். நாளை காலையில் சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமித்ஷா, அன்று மாலை வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் தனித்தனியாக நேரம் கேட்டிருப்பதாக முதலில் தகவல் வெளியாகியது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்தான் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சேலத்தில் உள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் இடது கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிகப்படியான வலியால் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும், எனவே, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், அமித்ஷாவை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருப்பதாகவும், ஆனால் நேரம் ஒதுக்கப்படுவது குறித்து பாஜக தரப்பில் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை அமித்ஷா சந்திப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை பாஜக தொடங்கிய நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதி வரை செல்லும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
பெரும்பான்மை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிமுகவில் இருந்தாலும், அனைவரும் ஒன்றிணைந்தால்தான் வெற்றி சாத்தியம் ஆகும் என்பதை பாஜக நன்கு உணர்ந்திருக்கிறது என்பதே தெரிகிறது. தற்போது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், ஓபிஎஸ் கைகோர்த்துள்ளார்.
இதனால், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு இறுதி வரை பாஜக அழுத்தம் தரலாம் எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை இன்று அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திக்காத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தால் மீண்டும் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாக மாறும் எனவும், பாஜக இன்னும் ஓபிஎஸ்சை கைவிடவில்லை என்று பேசப்படும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பத்திரிகை, திராவிடம் இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது - எ.வ.வேலு புகழாரம்