சென்னை: கண்ணகி நகர் 57வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் உஷாராணி. இவரது கணவர் பாலு. நேற்று மாலை உஷா ராணி வீட்டிற்கு அருகில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்று உள்ளார். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் வெங்கடேஷ் என்ற நபர் உஷா ராணியை ஆபாசமாகப் பேசி கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இது தொடர்பாக, அந்த தெருவில் வசிக்கும் பெண்கள் கண்ணகி நகர் காவல் நிலையம் சென்று நேற்று மாலை புகார் தெரிவித்து உள்ளனர். காவல்துறையினர் வெங்கடேஷை அழைத்து எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர், இன்று காலை உஷாராணியின் கணவர் பாலு வீட்டிற்கு வெளியே வாசலில் அமர்ந்திருந்த போது வெங்கடேஷ் பாலுவை மிரட்டித் தாக்கி உள்ளார்.
இதனைத் தட்டிக் கேட்ட மனைவி உஷாராணியின் கழுத்து, கை, காதில் நகத்தால் கீரி காயத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தைப் பக்கத்து வீட்டுக்காரர் குமார் தடுக்க முயன்ற போது, வெங்கடேஷின் மனைவி ராதிகா வெங்கடேஷிடம் கத்தியைக் கொடுத்ததால் கத்தியைக் கொண்டு குமாரின் விலா எலும்பில் குத்தி உள்ளார். இதில் குமார் பலத்த காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குமாரின் இரு மகள்களும் இதனை தடுக்க முயன்ற போது இருவரையும் கத்தியால் வெங்கடேஷ் தாக்கி உள்ளார். இதில் இருவருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த குமார் மற்றும் மகள்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் குமாருக்கு திடீரென மூச்சு இறைக்க ஆரம்பித்தால் ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர். கத்திக்குத்து காயம் நுரையீரல் வரை பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 மாத காலமாக வெங்கடேஷ் அப்பகுதி பெண்களை மிரட்டுவது, ஆபாசமாகப் பேசுவது, தாக்குவது, பயமுறுத்துவது, சில நேரங்களில் கத்தியைக் காட்டி குத்தி விடுவதாக மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். பெண்களை மட்டும் குறி வைத்துத் தாக்கி, மிரட்டி வந்த சைக்கோ நபரை காவல்துறையினர் கைது செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், “நேற்று மாலை பிரச்னை செய்த நபரை காவல்துறை விடுவித்ததால் தான் இன்று கத்தியால் குத்தி உள்ளார். காவல்துறை இதற்கு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து கண்ணகி நகர் ஆய்வாளர் கூறுகையில், “நேற்று எச்சரித்து அனுப்பினோம். இன்று வெங்கடேஷின் மனைவி ராதிகாவை காவல்நிலையம் அழைத்து வந்துள்ளோம். கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளோம். விரைவில் தப்பியோடிய நபரைக் கைது செய்து விடுவோம்.” என தெரிவித்தார்.