சென்னை: தியாகராய நகரில் உள்ள அருளாம்பாள் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (42). இவர் போயஸ் தோட்டத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி கட்டட சுற்றுச்சுவர் அருகே இருக்கும் பிள்ளையார் கோயிலில் தினமும் பூஜை செய்து வருகிறார். இந்த நிலையில் ஜெ. தீபா, அவரது கணவர் மாதவன் உள்பட 50 பேர் மீது, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஹரிஹரன் புகார் அளித்து உள்ளார்.
அந்த புகாரில், "கடந்த 1992 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த உத்தரவின் பேரில் தினமும் காலை வேளையில் கோயிலில் பூஜை செய்து வருவதாகவும், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அனுமதியுடன் பிள்ளையார் கோயிலிலும், சிவன் கோயிலிலும் பூஜை செய்து வருவதாகவும், அதற்கான செலவு மற்றும் சம்பளத்தை சசிகலா கொடுத்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
மேலும், தான் வழக்கம் போல கோயிலில் பூஜை செய்ய சென்ற போது, அப்போது அங்கு வந்த ஜெ. தீபா, அவரது கணவர் மாதவன் மற்றும் 50 பேர் இணைந்து தன்னை பூஜை செய்யவிடாமல் நிறுத்தியதாகவும், பின்னர் ஜெ. தீபா தன்னிடம் 'யார் உன்னை பூஜை செய்யவிட்டது' என தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்றதாகவும் புகாரில் ஹரிஹரன் தெரிவித்து உள்ளார்.
மேலும் இனி கோயிலில் பூஜை செய்ய வந்தால் கொலை செய்துவிடுவதாகவும் ஜெ.தீபா, மாதவன் உள்பட பலர் மிரட்டி அனுப்பியதாக புகாரில் ஹரிஹரன் குறிப்பிட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து கோயிலில் பூஜை செய்ய தனக்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜெ. தீபா, மாதவன் மற்றும் அவர்களுடன் வந்த 50 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரில் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.