சீனாவில் தாக்கிய கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது . விமான நிலையங்களில் வரும் பயணிகள் சோதனை செய்யப்பட்ட பின்னரே, மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சோதனையின்போது கொரோனா தொற்று அறிகுறிகள் சரியாக தென்படாவிட்டாலும், அதன் பாதிப்பு பின்னர் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஓமன் நாட்டில் பணிபுரிந்துவிட்டு கடந்த 27ஆம் தேதி தமிழ்நாடு வந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருடைய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டிலும், பூனேவில் உள்ள தேசிய வைரஸ் நோய் தொற்று கிருமிகள் ஆராய்ச்சி நிலையத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் உறுதிசெய்துள்ளார்.
அந்த நபருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் தயார் நிலையிலுள்ள தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார் என தமிழ்நாடு சுகாதாரத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொரோனாவைத் தடுக்க ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு - ட்ரம்ப் அறிவிப்பு!