சென்னை: 2020ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைதான கார்த்திக் மற்றும் ஐயப்பனை வழக்கு விசாரணைக்காகப் புழல் சிறையிலிருந்து நேற்று ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது இரண்டாவது தளத்தில் உள்ள 20ஆவது கூடுதல் நீதிமன்றத்திற்குச் செல்ல தரைதளம் வழியாகக் குற்றவாளிகளை அழைத்துச் செல்லும் போது, திடீரென ஒரு முதியவர் ஒரு அடி நீளமுள்ள கத்தியால் குற்றவாளிகளை வெட்ட முயன்றார்.
இதனைக் கண்ட காவலர்கள் உடனடியாக அந்த முதியவரைத் தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை அழைத்துச் சென்றனர். பின்னர் குற்றவாளிகளைக் கத்தியால் வெட்ட முயன்ற முதியவரை பெரிய மேடு காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த முதியவர், சூளைமேடு பெரியார் பாதை பகுதியைச் சேர்ந்த உதயகனி(60) என்பது தெரியவந்தது.
மேலும் தனது மகனின் பெயர் ஆண்டனி உபால்ட் எனவும் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது மகன் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பஞ்சாயத்து செய்ததற்காக ஐயப்பன் மற்றும் கார்த்திக் ஆகியோர் இணைந்து தனது மகனைக் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால் தனது மகனைக் கொலை செய்த நபர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரத்திலிருந்து வந்ததாகவும், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் தகவல் தெரிந்து கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து உதயகனியிடம் காவல்துறையிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:லாரியில் கடத்தப்பட்ட மது பாட்டில்கள்...பெண் சாராய வியாபாரி கைது