சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.12) கூடுதல் தலைமைச் செயலாளர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளரிடம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லிபாபு, சாதி சான்றிதழ் கோரி தீக்குளித்த மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்த வேல்முருகன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட, குறவர் ஆகிய சமூகங்களை சேர்ந்தவர்கள் சாதி சான்றிதழ் பெறுவதற்கு ஒரு பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியுள்ளது.
மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் எனும் நபர் தனது மகனின் சாதி சான்றிதழுக்காக வெகு நாட்களாக அலையவிடப்பட்டிருக்கிறார். இவ்வாறு இருக்கையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்திற்குள் வந்த அவர் திடீரென உடலில் பெட்ரொல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு உயிர் நீத்துள்ளார்.
இந்நிலையில் சான்றிதழ் கோரி தீக்குளித்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் சேலம், திருவள்ளூர், திருப்பத்தூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கிட மறுத்து வருகிறார்கள்.
அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக வருவாய் கோட்டாட்சியர் செயல்பட்டு வருகின்றனர். எனவே பழங்குடி இன மக்கள் உரிமையை மறுப்பது குறித்து விசாரணை செய்து சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டுமென கோரிக்கையை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் மற்றும் மலைக்குறவர் ஆகியோர் சமுதாய மக்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்கிடும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் அரசு விடுமுறைகள்... 2023ஆம் ஆண்டில் எத்தனை அரசு விடுமுறை தினங்கள் தெரியுமா..?