சென்னை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் வேணு மாதவ் குப்புரு (48). இவர் மீது விஜயவாடா காவல் துறை பண மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல் உள்பட பல்வேறு புகார்களில் வழக்குப்பதிவு செய்தது. எனவே விஜயவாடா காவலர்கள் இவரை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் இவர் காவல் துறையிடம் சிக்காமல், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
இதையடுத்து 2019ஆம் ஆண்டு விஜயவாடா காவல் துறை ஆணையர், மாதவ் குப்புருவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் எல்ஓசி அனுப்பி வைத்தார். இந்நிலையில் இன்று காலை ஏர் பிரான்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் பிராண்ஸிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதித்தனர்.
இந்த விமானத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வேணு மாதவ் குப்புருவும் வந்தார். இவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தபோது, இவர் 4 ஆண்டுகளாக ஆந்திர மாநில காவல் துறையால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது. மேலும் இவர் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலிருந்து, பிரான்ஸ் வழியாக இந்த விமானத்தில் சென்னை வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை வெளியில் விடாமல் அதிகாரிகள் சுத்தி வளைத்து பிடித்தனர். அதோடு குடியுரிமை அலுவலகத்திலுள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர். பின்பு விஜயவாடா காவல் ஆணையருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ஆந்திர மாநில காவல் துறை குற்றவாளியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: விமானத்தில் வந்து தொடர் திருட்டு; 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது