சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலை பகுதியை சேர்ந்தவர் பெண்மணி சக்தி (36). இவர் அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு 2008ஆம் ஆண்டு திருமணமான நிலையில், குழந்தையின்மை காரணமாக காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவர் 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை வங்கியில் பணிப்புரிந்து வந்தபோது, அந்த வங்கிக்கு வாடிக்கையாளராக வந்த ரிபியா பஸ்ரின்(38) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் ரிபியாவின் கணவர் நாகூர் மீரானுடன் சக்தி பழகி வந்துள்ளார்.
வங்கி மேலாளர் சக்தி குழந்தையில்லாமல் தவித்து வந்ததால் நாகூர் மீரான் மற்றும் ரிபியா ஆகியோர் மருத்துவர் உமாராணி என்பவரை சிபாரிசு செய்துள்ளனர். இதையடுத்து மருத்துவர் உமாராணியிடம் சிகிச்சை பெற்று டெஸ்ட் டியூப் மூலம் 2 பெண் குழந்தையை சக்தி பெற்றுள்ளார். இதனால் சக்தி, நாகூர் மீரான் குடும்பத்திற்கு 13 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.
பின்னர் திடீரென்று நாகூர் மீரான், குழந்தை பிறந்ததற்கு காரணம் தனது உயிர் அணுக்கள் எனவும், அதனால் 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று சக்தியை மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று சக்தியின் வீட்டிற்கு வந்த நாகூர் மீரான் ஆபாச வார்த்தையில் திட்டிவிட்டு 25 லட்ச ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் குழந்தைகளை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த சக்தி உடனே எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் நாகூர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.