சென்னை: இந்தியா விடுதலை பெற்றபோது 1947 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட செல்கோல் குறித்து உம்மிடி பங்காரு செட்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உம்மிடி சுதாகர், அவரின் மகன் உம்மிடி பாலாஜி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறினர். அவர்கள் கூறும்போது, “நாங்கள் தயாரித்த செங்கோல் நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட உள்ளது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. மத்திய அரசின் அழைப்பின்படி எங்களது குடும்பத்தில் 15 நபர்கள் திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளோம்.
உம்மிடி பங்காரு நிறுவனம் சார்பில் 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செங்கோல் கிட்டதட்ட 5 அடி உயரம் கொண்டது, ஒன்றரை முதல் 2 கிலோ வரை எடை கொண்டது. வெள்ளியில் செய்து தங்கமுலாம் பூசப்பட்டது. செங்கோலை 10, 12 நபர்கள் சேர்ந்து, வெறும் கைகளால் சுமார் ஒரு மாதம் முழுவதும் செய்து முடித்தனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் செங்கோல் மீண்டும் வைக்கப்படுவதன் மூலம் வரலாறு மீண்டும் திரும்புவது எங்களுக்கு பெருமை தருகிறது. திருவாவடுதுறை ஆதீனம் சொன்னபடி செங்கோலை செய்து கொடுத்தோம். செங்கோலை செய்யும்போது எனது தந்தைக்கு 14 வயது இருக்கும். அவர் அதனை பார்த்துள்ளார்.
உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தின் 4 ஆவது தலைமுறையான எங்களுக்கு அந்த செங்கோல் பற்றி இப்போதுதான் தெரியவந்தது. அடுத்து எங்களின் வாரிசுகள் 5 ஆவது தலைமுறையாகும். திருவாடுதுறை ஆதினம் கூறியபடி செய்து அந்த செங்கோலை அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்டு, பின்னர் அலகாபாத் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோலை மத்திய கலாசாரத்துறை அதிகாரிக்ள 3, 4 மாதங்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.
நாங்கள் 1947 ஆம் ஆண்டில் ஆதீனத்திடம் நாங்கள் தயாரித்த செங்கோலை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தோம். செங்கோலை டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். திருவாவடுதுறை ஆதீனம் கூறியது போல் செங்கோலை வடிவமைத்து தந்தோம். திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் எங்கள் குடும்பத்துக்கும் தொடர்பு இருந்தது. அந்தக் காலத்தில் கோயில்களுக்கு நிறைய பொருள்களை நாங்கள் செய்து கொடுத்திருக்கிறோம், அதனால் ஆதீனம் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த பணியை கொடுத்தார்.
அப்போது சௌகார்பேட்டையில் எங்களது நகை தயாரிப்பு கூடம் இருந்தது, பின்னர் தியாகராயநகருக்கு மாற்றிவிட்டோம். செங்கோலை செய்து திருவாவடுதுறை ஆதீனத்திடம் நாங்கள் கொடுத்துவிட்டோம் , அதன் பிறகு அந்தச் செங்கோல் மவுன்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து எங்களுக்கு தெரியாது” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 75 Rupees Coin: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பையொட்டி 75 ரூபாய் நாணயம் அறிமுகம்!