சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.15) நள்ளிரவு முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டின் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஏப்.15) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் உள்ளிட்ட பகுதியில் அதிகளவிலான மக்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தடைக் காலத்தை முன்னிட்டு ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீன்பிடி தடைக்காலம் காரணமாக மாவட்டம் முழுவதும் விசைப்படகு மீன்பிடி தொழிலை நம்பி உள்ள சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு தரப்பில் நிவாரணத் தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும் என மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து மீனவ தொழிலாளர் நலச் சங்க துணைத் தலைவர் தர்மபிச்சை கூறுகையில், "மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் காலத்தில் 6 ஆயிரம் ரூபாய் அரசு வழங்கும். அதை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.
இந்த 61 நாட்கள் தடைக் காலம் என்பதால் துத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மீன்பிடி தடைக் காலத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து விசைப் படக்குகளில் வந்து மீன் பிடித்து தொழிலை நசுக்குகின்றனர். ஆகவே, தமிழக அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைத்து மீன்பிடிக்க தடை செய்து கேரள விசைப்படகுகள் தொழில் செய்யாத அளவுக்கு தடுப்பு போட வேண்டும்" என்றார்.
அதேபோல் கடலூர் மாவட்டத்திலும் மீன்பிடி தடைக் காலத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான விசைப் படகுகள் துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகள் மற்றும் வலைகளை பராமரிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். டீசல் மானியத்தை உயர்த்தி தர வேண்டும் என்றும் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்களை போல் மீன் பிடி விசைப்படகுகளை பழுது பார்க்க போதிய அளவு நிவாரணத் தொகையை உயர்த்தி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க : Bannari temple: பண்ணாரி கோயிலில் பாரம்பரிய நடனமாடிய படுகர் இன மக்கள்!