சென்னை: ஆதம்பாக்கத்தில் ஆலந்தூர் தெற்கு திமுக பிரதிநிதி பிரபாகரன் என்பவரது இல்லம் கடந்த மாதம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. அந்த இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக ரூ.3 லட்சம் செலவில் 16 அடி உயரத்தில் பைபர் மற்றும் சில்வர் கலந்த பேனா மாதிரியை பிரபாகர் தனது புதிய வீட்டின் முகப்பு பகுதியில் பொருத்தியுள்ளார்.
சமீபத்தில் கருணாநிதியின் நினைவு சின்னமாக கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் சீமான் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடல் மாசு அடையும் என அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக மாவட்ட பிரதிநிதி பிரபாகர், அவரது வீட்டில் பேனா நினைவு சின்னம் அமைத்தது திமுகவினரிடையே பேரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், திமுக பிரமுகர் வீட்டிற்கு வந்து செல்போனில் படம் பிடித்தும், செல்ஃபி எடுத்தும் செல்கின்றனர்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் திமுக பிரமுகர் லியோ பிரபாகரனிடம் கேட்டபோது, 'தலைவர் அவர்களின் நினைவாக தனது புதிய வீட்டில் முகப்பு பகுதியில் 'பேனா நினைவுச் சின்னம் (karunanidhi pen statue)' அமைத்துள்ளேன். மேலும், கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும். இதுபோன்று தமிழ்நாட்டின் மற்ற பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கான பேனாக்கள் உதயமாகும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேனா நினைவுச் சின்னம்: கடலில் அமைத்தால் தூக்கி வீசிவிடுவோம் - சீமான் காட்டம்