சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், 2017ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை, கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிகாரிகள், ஊழியர்கள் என சுமார் 900 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று (ஜன. 03) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், வழக்கை நடத்துவதற்கான அனுமதியை தமிழக அரசிடம் பெறும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்ட சிலர், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சார்பில், தங்களை தேவையின்றி வழக்கில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, கூடுதல் குற்றபத்திரிக்கையில் 900 பேர் வரை சேர்த்துள்ளதால், அனுமதி கிடைத்த பின்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்க முடியும் என தெரிவித்தார். மேலும், முதல் குற்றம் சாட்டப்பட்ட நபராக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை நடத்துவதற்கான அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜெயவேல், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியில் காய்கறி கடை விலைப்பலகை.. மயிலாடுதுறை வியாபாரிக்கு வரவேற்பு!