சென்னை: சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் நேற்று மாலை ரயில் நிலையத்தில், சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவுரா விரைவு ரயில் வந்தடைந்தது.
அந்த ரயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த நபர் ஒருவரை பிடித்து, ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவரிடம் பாலீதின் கவரில் சுற்றப்பட்ட நிலையில், கட்டுக்கட்டாக 75 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
ஆனால் அதற்காண ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் 75 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பணம் கொண்டு வந்த நபர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சோவிக் மண்டல்(24) என்பதும், நகை செய்யும் தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மிண்ட் தெருவில் உள்ள நகைக்கடையில், நகை வாங்குவதற்காக 75 லட்ச ரூபாய் பணம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால், 75 லட்ச ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினரிடம் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்புச் சம்பவம்: கேரளா, மங்களூரு என நீளும் என்.ஐ.ஏ. விசாரணை வளையம்