சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர், 2ஆவது தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் விஸ்வநாதன். இவர் இன்டஸ்இன்ட் வங்கியின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு கிழக்குக் கடற்கரைச் சாலை நெமிலிச்சேரி பகுதியில் பண்ணை வீடு உள்ளது. வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குடும்பத்துடன் பண்ணை வீட்டிற்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு பண்ணை வீட்டிலிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிவந்துள்ளார். அப்பொழுது பூட்டிய வீட்டின் கதவுகள் திறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் வைத்திருந்த 70 சவரன் தங்க நகைளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. அது மட்டுமின்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த அரை கிலோ வெள்ளிப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: போதை மாத்திரைகள் பறிமுதல் - விற்பனை செய்த 6 பேர் கைது!