தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பிரச்னை இருப்பதையொட்டி அரசின் ஒவ்வொரு துறையின் செயலாளர்களும் மாவட்டம் தோறும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்தார். இந்த கள ஆய்வின் போது, மக்களிடம் நேரடியாக குறைகளை அவர் கேட்டறிந்தார்.
கிராமத்தின் தண்ணீர் பிரச்னையை சரிசெய்யும் பொருட்டு, தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட, மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பர்கூர் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கோதியழகனூரில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்த வரை மழை பொழிவு 60 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதால், 70 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் வீடுகளிலும் அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் அரசு பொது மருத்துவமனையிலும் தண்ணீர் திறந்து பார்த்து ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறிய அவர், தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.