சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூபாய் 2438 கோடி மோசடி செய்த வழக்கில், இயக்குநர்கள் உட்பட 21 பேரை இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிறுவனத்தின் இயக்குநரில் ஒருவரான அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(37) என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த செந்தில்குமார், தினமும் காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் செந்தில்குமார் ஜூலை 28ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு, கோயம்பேடு சேமாத்தம்மன் செக்டர் தெருவில் அமைந்துள்ள தனது உறவினர் முருகன் என்பவரை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் செந்தில்குமாரைத் தாக்கி கடத்திக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனைக் கண்ட அவரது உறவினர் முருகன் உடனடியாக இது குறித்து செந்தில்குமாரின் மனைவி சரண்யாவிடம் தெரிவித்துள்ளார். அவர் செந்தில்குமாரின் செல்போனிற்கு தொடர்பு கொண்ட போது, அதில் பேசிய நபர்கள் செந்தில்குமாரால் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்து 15 லட்சம் ரூபாய் இழந்திருப்பதாகவும், அதற்கு இழப்பீடு பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
மேலும், செந்தில்குமாரைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்த சரண்யா நகையை விற்று 1 லட்சம் ரூபாயைத் தருவதாகக் கடத்தல் கும்பலிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 28ஆம் தேதி காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனை அருகே 1 லட்ச ரூபாய் பணத்தை கொண்டு வந்து தருமாறு அந்த கும்பல் கூறியதின் பேரில், செந்தில்குமாரின் மனைவி 1 லட்சம் பணத்துடன் சொன்ன இடத்திற்கு வந்து காத்திருந்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த கும்பல் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சரண்யா கணவர் செந்தில்குமாரின் கைப்பேசியைத் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்ததால் வேறு வழியின்றி செந்தில்குமாரின் தாய் கலா கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் கடத்தப்பட்டுள்ள செந்தில்குமாரின் செல்போன் எண்ணை வைத்து தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் வைத்து 7 பேரைத் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட இவர்கள் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் செல்வம்(38), பாலாஜி(27), சரவணன்(27), அஜித் குமார், விக்னேஷ், மணிகண்டன், சிவா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் கடத்தப்பட்ட செந்தில்குமாரை நேற்று மாலை போரூர் டோல் பிளாசா அருகில் இறக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செந்தில்குமாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது செந்தில்குமார் திண்டுக்கல் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:24 மணிநேரமும் மது விற்பனை; அரசு பேருந்து முழுவதும் விளம்பரம் - திமுக அரசை விமர்சித்த மாஜி அமைச்சர்!