சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பாஸ் என்கிற பாஸ்கரன், ஏழாம் அறிவு, மன்மதன் அம்பு உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. மேலும் பல திரைப்படங்களை விநியோகம் செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஸ்டூடியோ இயக்குனர் சரவண முத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் சமூக வலைதளங்களில் சமீபத்தில் ரெட் ஜெயன்ட் பெயரை கெடுக்கும் விதமாக ஒரு ஆடியோ ஒன்று உலாவி வருவதாகவும், அந்த ஆடியோவில் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறும் நபரான டில்லி பாபு தங்களது நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த ஆடியோவில், ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோருக்கு தர வேண்டிய பணத்தை உடனடியாக கொடுத்துவிடு, இல்லையேல் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தில் பல பேரை தனக்கு தெரியும் உன்னை கொலை செய்து விடுவேன் என டில்லிபாபு என்ற நபர் மிரட்டியதாக பதிவாகி உள்ளது.
இதனால் தங்களது நிறுவனத்தின் பெயரை தவறுதலாக யாரோ பயன்படுத்தி மிரட்டியுள்ளதாகவும், உடனடியாக அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் ஆடியோ வெளியிட்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தும் போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் பெர்படாகுறிச்சியைச் சேர்ந்த வெங்கடேஷ் பெருமாளின் செல்போன் எண்ணில் இருந்து வெளியானது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து இவருக்கு போன் செய்து மிரட்டிய செல்போன் எண்ணை வைத்து திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த டில்லிபாபு, தஞ்சாவூரை சேர்ந்த சகோதரர்களான அனிஷ், ஹரிஷ், மஞ்சுநாதன், மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த சிதம்பரம், மணிகண்டன் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராமதாஸ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் வெங்கடேஷ் நெல் வியாபாரம் செய்து வருவதும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்களான ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோரிடம் இருந்து வெங்கடேஷ் 25 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. வாங்கிய கடனை வெங்கடேஷ் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்ததால் ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மஞ்சுநாதன் உதவியுடன், டில்லிபாபுவிடம் பணம் வசூலித்து தரக்கோரி கேட்டதாக தெரிகிறது.
இதையடுத்து டில்லிபாபு, வெங்கடேஷ் பெருமாளை செல்போனில் தொடர்பு கொண்டு தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோருக்கு தர வேண்டிய பணத்தை உடனே தர வேண்டும் என்று மிரட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
அதன் பேரில் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறி, நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, மிரட்டல் விடுத்த டில்லி பாபு, ஹரிஷ், அவரது சகோதரர் அனிஷ், மஞ்சு நாதன் உட்பட ஏழு பேர் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: Cm House bomb threat : முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் திடீர் மிரட்டல்!