திருவள்ளூர்: ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத் துறையின் அங்கீகாரம் பெற்ற ஒரு போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதைப் பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இதில் சில சிறுவர்கள் இங்கு இருப்பதற்கு பிடிக்காமல் தப்பிச் செல்ல திட்டமிட்டு, தங்களுக்குள் சண்டை இட்டுள்ளதாக தெரிகிறது. அதிலும் கெல்லிஸ், ராயபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மையங்களைச் சேர்ந்த 7 சிறுவர்கள், மையத்தின் கணக்காளர் வினோத் என்பவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
பின்னர், அவரிடம் இருந்து சாவியை பிடுங்கி வந்து கேட்டை திறந்து தப்பி ஓடி உள்ளனர். இதனையடுத்து, இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், மையத்தில் உள்ள இயக்குனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திருமுல்லைவாயல் காவல் துறையினரும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலங்களாக, மறுவாழ்வு மையங்களில் இருந்து சிறுவர்கள் தப்பி ஓடும் சம்பவம் அதிகரித்து வருவதால், அதற்கு உரிய பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என குழந்தைகள் நல அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கறிக்குழம்பு எங்கே! தந்தையை கத்தியால் குத்திய மகனுக்கு வலைவீச்சு - தஞ்சையில் விபரீதம்