சென்னை:தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர், கரோனா பரவல் காரணமாக, ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இட ஒதுக்கீடு, பெண்களுக்கு மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகள் எனப் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் நிகழ்த்திய உரையில்,
- ' சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்தைப் பாதுகாத்திட இந்த அரசு எப்போதும் பாடுபடும்;
- 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூக நீதியை உறுதி செய்துள்ளது. இந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்;
- தற்போது உள்ள வருமான வரம்பு 8 லட்சம் ரூபாயை 25 லட்சம் ரூபாயாக உயர்த்த ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்;
- உரிய நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலமாக வக்பு வாரியத்தின் நிலங்கள் பாதுகாக்கப்படும்;
- அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள் சிறப்பு நியமனம் மூலம் நிரப்பப்படும்;
- வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் பொருட்டு பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டம் தோறும் நிறுவப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் - முக்கியத்துவமான ஆளுநர் உரை