சென்னை: தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் ஆழ்கடலுக்குள் மீனவர்கள், மீன்பிடிக்க செல்ல உள்ளனர். இதனால் மீன்களின் விலை வருகின்ற நாட்களில் குறைய வாய்ப்புள்ளது.
மத்திய அரசு மீன்வளம் பாதுகாப்பு, மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும், கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் தடைக்காலம் அமலில் இருக்கும்.
இந்நிலையில் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் இந்த மீன்பிடி தடைக்காலம் இன்று வரை உள்ளது. இதன் காரணமாக ஆழ்கடல் மீன் பிடி விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த தடை காலத்தில் தங்களுடைய படகுகளை செப்பனிடுதல், பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். இந்நிலையில் இன்றுடன் இந்த தடைக் காலம் முடிய உள்ள நிலையில் சென்னை காசிமேடு மீனவர்கள் தங்கள் படகுகளை தயார் செய்து, மீன்களைப் பிடிக்க, வலை, ஐஸ், டீசல் உள்ளிட்ட தேவையானவற்றை தங்களது படகில் ஏற்றினா்.
இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர். இனிமேல் வருகின்ற நாட்களில் மீன் விலை உயர வாய்ப்பு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'உடல் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி!' - ஏர்போர்ட்டில் எமோஷனலான டி.ஆர்!