சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் வீட்டுத் தனிமையில் 91,251 உள்ளனர். இதில் 19,060 பேர் 28 நாள் கண்காணிப்பு முடிந்து வீட்டுக்குத் திரும்பி உள்ளனர். தற்போது கரோனா பரிசோதனை செய்ய 21 புதிய கருவிகள் வந்துள்ளன.
இந்தக் கருவிகளை அரசு மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சியால், 1 லட்சம் பரிசோதனை கருவிகள் மாநிலத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் வர உள்ளது. அதன் மூலம் 30 நிமிடத்தில் கரோனா வைரஸ் தொற்றைப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய பரிசோதனையில் 50 நோயாளிகளுக்குக் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று காலை சென்னையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதால், தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி சென்று வந்தவர்கள், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என 32 மாவட்டங்களில் 40 லட்சத்து 71, 230 பேர் தனி நபர் கண்காணிப்பில் உள்ளனர். டெல்லி சென்று வந்தவர்களுடன் தொடர்பிலிருந்த குடும்பத்தினர் 250 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் சிலருக்கு மட்டுமே கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட ரிக் வண்டி தொழிலாளி திடீர் உயிரிழப்பு!