சென்னை: பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, மூவரசம்பேட்டை அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்தில், நேற்று (ஏப்ரல் 5) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தீர்த்தவாரியின்போது கோயில் குளத்துக்குள் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் இறங்கினர்.
அப்போது கோயில் குளத்துக்குள் மூழ்கிய சூர்யா, பணேஷ், ராகவ், யோகேஸ்வரன், ராகவன் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் இன்று (ஏப்ரல் 6) சட்டப்பேரவையில் எதிரொலித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், "கோயில் குளங்களை தூர்வாரும் பணியை அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும். குளத்தில் மூழ்கி இறந்தவர்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை போதுமானதாக இருக்காது. தமிழ்நாடு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
மேலும் இதுதொடர்பாக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினரும் பேசினர். இனி வரும் காலங்களில் கோயில் தீர்த்தவாரியின்போது தீயணைப்புத்துறை, மருத்துவத்துறையைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து இதற்குப் பதில் அளித்துப் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "தர்மலிங்கேஸ்வரர் கோயிலுக்கு தனி குளம் கிடையாது. ஆகவே, மூவரசம்பேட்டையில் உள்ள பஞ்சாயத்து குளத்தில் சர்வ மங்களா சேவா சங்க டிரஸ்ட் உறுப்பினர்கள் தீர்த்தவாரியை நடத்தி உள்ளனர். தீர்த்தவாரி குறித்து தொல்லியல்துறை, மண்டல் குழு, இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் கூறாமல் நடத்தியதால்தான் இந்த துயர விபத்து நடந்துள்ளது. இந்த கோயில் குளம் தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஒரே ஆண்டில் 8 இடங்களில் அகழாய்வு: பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!